ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனசரகத்திற்குட்பட்ட குன்றி மலைப் பகுதியில் கல்வாரி மலையில் விவசாய நிலத்தில் சோளப்பயிர்களுக்குள் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கோபிசெட்டிப்பாளையம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கோபி மதுவிலக்கு காவல்துறையினர், தகவலின் பேரில் கடம்பூர் வனப்பகுதியில், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த சோளப்பயிர்களுக்குள் சோதனை செய்துள்ளனர். அப்போது சுமார் 4 மற்றும் 5 அடி உயரமுள்ள இரண்டு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம் (50) என்பவரை கைது செய்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஞானபிரகாசத்திடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, அணைக்கரை பகுதியில் திக்கரை சோளக்காட்டில் சித்தன் என்பவர் கஞ்சா பயிரிட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, அங்கு 5 அடி உயரமுள்ள கஞ்சா செடிகள் நன்கு வளர்ந்து காணப்பட்டதை அடுத்து அவரை கைது செய்து போலீசார், அவரிடமிருந்து கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: "போதை மாநிலமாக மாறிய தமிழகம்" - எடப்பாடி பழனிசாமி ஈரோடு கல்லூரி விழாவில் பேச்சு!