ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் சுவர்ணாவதி அணை உள்ளது. இப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கால்நடை வளர்ப்பை முக்கியத் தொழிலாகச் செய்துவருகின்றனர்.
அவர்கள், மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வனத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று (நவ. 19) மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பவுதற்கு மாடுகள் அணிவகுத்து வந்தன.
அப்போது, தமிழ்நாட்டிலிருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மாடுகள் மீது மோதியது. இதில் ஒரு பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கூட்டத்திலிருந்த மாடுகள் இறந்து கிடந்த பசுமாட்டை பாசத்துடன் சுற்றிச்சுற்றி வந்தன.
அதில் ஒரு மாடு இறந்து கிடந்த பசுமாட்டின் உடலை முகர்ந்து, மாட்டை எழுப்ப முயன்றது. இறந்து கிடந்த மாட்டை பாசத்துடன் எழுப்ப முயற்சித்த மற்ற மாடுகளின் செயல், காண்போரின் மனதை நெகிழ வைத்தது.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், உயிரிழந்த மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாட்டின் உரிமையாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திருட்டு மின்சாரம் பாய்ந்து 9 மாத சினை பசு மாடு உயிரிழப்பு!