ஈரோடு: எல்லப்பாளையம் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வேலுச்சாமி. இவர்களுக்கு ஜோஹித் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். தனது மகன் ஜோஹித் மூலம் உக்ரைன் நாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாகத் தனலட்சுமி கவுந்தப்பாடியைச் சேர்ந்த கவியரசு, மற்றும் நவீன் வர்ஷன் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய கவுந்தப்பாடியைச் சேர்ந்த கவியரசு மற்றும் நவீன் வர்ஷன் சுமார் 15 லட்சம் ரூபாயைக் கடந்த 2018 ம் ஆண்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து கவியரசு, நவீன் வர்ஷன் ஆகிய இருவரையும் உக்ரைன் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஜோஹித் உக்ரைன் நாட்டில் தான் தங்கியிருந்த அறையில் இருவரையும் தங்க வைத்துள்ளார்.
இதுகுறித் துகவியரசு மற்றும் நவீன் வர்ஷன் கேட்டபோது, தான் படிக்கும் கல்லூரியில் சேர்க்கை முடிந்து விட்டது என்றும். அதனால் தான் முதலாம் ஆண்டு பாடம் நடத்துகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த கவியரசு மற்றும் நவீன் வர்ஷன், ஈரோட்டில் உள்ள தங்கள் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.37 கோடி மதிப்பில் தரமற்ற மக்காசோளம்; குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
உக்ரைனில் உள்ள தங்களுக்குத் தெரிந்தவர்கள் உதவியுடன் கவியரசு மற்றும் நவீன் வர்ஷன் ஆகிய இருவரையும் பெற்றோர்கள் மீட்டுள்ளனர். மேலும் ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு காவல்நிலையத்தில் தனலட்சுமி மற்றும் வேலுச்சாமி மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனலட்சுமி மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி ஆகிய இருவரையும் இன்று (ஜூன்22) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் தீர்பின் அடிப்படையில் சிறை காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய இவர்களது மகன் ஜோஹித், உக்ரைன் நாட்டில் உள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவ சீட் வாங்கி தருவதாகச் சொல்லி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆவின் நிறுவன தற்காலிக ஊழியர் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி: சதி வேலையா? போலீசார் விசாரணை..