உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து, தமிழ்நாட்டை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருத்துகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பதால் அங்கிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு எல்லைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கேரளாவிலிருந்து ஈரோடு வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் இன்று ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் வருவோரை கண்காணிக்கும்படி ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் உத்தரவிட்டதை தொடர்ந்து, தாளவாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவா தலைமையில் மருத்துவக்குழுவினர் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே காரப்பள்ளம் வன சோதனைசாவடி அருகே முகாமிட்டுள்ளனர்.
குறிப்பாக, வாகனங்களில் பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என கேட்டறிந்து காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தெர்மல் கருவியைப் பயன்படுத்தி உடல் வெப்பநிலை கண்டறியும் பணி மேற்கொள்வதோடு, வாகனங்களில் ஸ்டியரிங், கைப்பிடி கம்பி, படிக்கட்டு பக்கவாட்டு கம்பி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பயணிகளிடம் கைகழுவுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், வெளிநாட்டு பயணிகள் வந்தால் அவர்களின் முழுவிவரத்தையும் பதிவு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து வருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : கேரளாவிலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு!