ஈரோடு மாவட்டம், அசோகபுரம் பவானி பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், தொழிற்சாலையில் பணிபுரியும் 400 தொழிலாளர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் கரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், முகாமினைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசுகையில், "தொழிற்சாலையில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்குரிய அனைத்துவித நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திட வேண்டும். 100 தொழிலாளர்களுக்கு மேல் கூட்டத்துடன் பணிபுரியும் பெரிய தொழிற்சாலைகளில் மாநகராட்சியின் சார்பில் நிரந்தமாக கரோனா பரிசோதனை முகாமினை அமைத்திட வேண்டும். பணிக்காக தொழிற்சாலைகளுக்குள் நுழையும் தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.