ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு, கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கும், நோயாளிகளுடன் பாதுகாப்பிற்காக உடன் அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.
ஜூன் 25ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 8 நாள்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர் ஒருவருக்கு நேற்று (ஜூலை 2) கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் பணியாற்றிய கரோனா தனி சிறப்பு வார்டு காலி செய்யப்பட்டு அங்கிருந்த நோயாளிகள் வேறு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று மருத்துவமனைக்குள்ளும் பரவிவருவது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.