ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த மலைப்பாதையில் 10 சக்கரத்துக்கு அதிகம் கொண்ட சரக்கு லாரிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் செல்ல தடை உள்ளது.
இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்கு சென்ற கண்டெய்லர் லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திம்பம் 9 வது வளைவில் லாரி பழுதாகி நின்றது. சாலையின் குறுக்கே நின்றதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் பயணிகள் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன.
கார், வேன், சுற்றுலா வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள், ஆசனூர் பண்ணாரி சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.