ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர்கள் சரவணன் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது ராஜாஜிபுரம் பகுதியில் பேசிய நடிகர் சுப்புராஜ், திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் கிடைக்கவில்லை என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் வடிவேலு குறித்து விமர்சனம் செய்த சுப்புராஜ், திமுக தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறுகளை பரப்பி வருவதாகவும், ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சரவணன், அதிமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருப்பதாகவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பதற்கு பெருமைப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை பெற அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.