ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நைனாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் நல்லகவுண்டன்பாளையத்தில் ஹாலோ பிளாக் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அமீன் (24) என்ற நபர் வேலை செய்து வருகிறார். மேலும் அமீன், ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு அங்குள்ள ஒரு சிறிய அறையிலேயே தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சரவணக்குமார் வழக்கம் போல் அலுவலக அறையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்று காலை சரவணக்குமார் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது, அறையின் கதவு கடப்பாரையில் உடைக்கப்பட்டு, அறையிலிருந்த மேஜைகளும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதை கண்ட அதிர்ச்சியடைந்த சரவணக்குமார், உடனே அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அப்போது, அந்த சிசிடிவி காட்சியில், முகத்தில் துண்டால் மறைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் கடப்பாரையால் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தைக் கொள்ளையடிப்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து சிசிடிவியில் பதிவான கட்சியை வைத்து பார்த்த போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அமீன் என்பது தெரிய வந்தது.
அதன் பின்னர் சரவணக்குமார் அமீனை பிடித்து விசாரணை செய்த போது, முதலில் மறுத்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் அமீனை ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரித்ததில் கதவை உடைத்துக் கொள்ளையடித்த பின்பு அந்த பணத்தை, நிறுவன வளாகத்திலேயே ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்து வைத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் அலுவலக சாவி ஒன்று அவரிடம் உள்ளதும், இந்த கொள்ளை சம்பவத்தில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என கையில் சாவி இருந்தும் அலுவலக பூட்டை உடைத்துக் கொள்ளையடித்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுகுறித்து அமீனிடம் கேட்ட போது, மது போதையில் செய்து விட்டதாகக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கோபி போலீசார் அமீனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மோட்டரில் நூதன முறையில் தங்கம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?