ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி, அருகேயுள்ள பூதாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி சிவமூர்த்தி. இவரது மகன் ஜடேருத்ரா (13), அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையில் பூதாளபுரம் வனப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சிவமூர்த்தி குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த காட்டுயானை ஒன்று சிவமூர்த்தி குடும்பத்தை துரத்தியது.
அனைவரும் ஓடி தப்பித்துக்கொள்ள அச்சிறுவன் மட்டும் காட்டுயானையிடம் சிக்கிக்கொண்டான். ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜடேருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு, இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் ஆசனூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கேமரா திருடன் கைது!