ஈரோடு: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானி சாகர் அணை, 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்வரத்து குறைந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

முக்கியமாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று (ஜூலை 4) காலை பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து 1,006 கன அடியாக இருந்த நிலையில், மழையின் காரணமாக இன்று (ஜூலை 5) காலை நீர்வரத்து 7,386 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே, இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.14 அடியாகவும், நீர் இருப்பு 17.40 டிஎம்சி என்கிற நிலையில் உள்ளது.
மேலும் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்..?