பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மாயாற்றில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 82 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டக் கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 5அடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணை வேகமாக நிரம்புவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பவானிசாகர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் பவானியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அய்யம்பாளையம், சித்தன்குட்டை ஆகிய அணை நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.