ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. பவானிசாகர் அணைக்கு பவானி ஆறும், மாயாரும் முக்கிய நீர்வரத்தாகவுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. தற்போது அணையில் இருந்து 11 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஓர் அடி உயர்ந்துள்ளது.
ஓரிரு நாளில் 102 அடி எட்டுவதால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 100.76 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 11 661 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3 ஆயிரத்து 50 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.27 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.