ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர்வரத்தாக உள்ள பவானிசாகர் அணை உள்ளது. நீலகிரி, கேரளா மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பவானி ஆறு, மோயாற்று வழியாக பவானிசாகர் அணையில் கலப்பதால் இரு தினங்களாக அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக10 ஆயிரம் கனஅடியாக வந்து நாளொன்றுக்கு 2 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை 62.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,927 கனஅடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 205 கனஅடியாகவும், நீர் இருப்பு 9.5 டிஎம்சியாகவும் உள்ளது.
பவானி ஆற்றிலும், மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.