ஈரோடு: தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 227 கன அடி ஆக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 5ஆம் தேதி 83 அடியாக இருந்த நிலையில் இன்று 95.35அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 25.48 டிஎம்சியாக உள்ளது.
தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் அணையின் மேல் மதகு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. 80 அடி உயரத்தில் உள்ள மேல் மதகு ஷட்டர் வழியாக நீர் கசிந்து வழிந்தோடும் காட்சி ரம்மியமாக உள்ளது. வெள்ளி கம்பியை உருக்கிவிட்டதுபோல் நீர் வழிந்தோடும் காட்சியை அவ்வழியாக செல்லும் மக்கள் ரசித்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: தொடங்கியது சீசன், குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்