சத்தியமங்கலம் பவானீஸ்வரர் ஆலயத்தில் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்ததில் 63 நாயன்மார்சிலைகள் சேதமடைந்தன. திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை பணியாளர்கள் எவரும் இல்லாதபோது இந்த விபத்து நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பவானீஈஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோயிலின் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்தது.
இதையடுத்து இடிந்த சுவருக்கு பதிலாக புதியதாக சுற்றுச்சுவர் கட்டி பலப்படுத்தும் பணி ரூபாய் 40 லட்சம் செலவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை கோயிலின் தெற்கு பிரகார சுவர் இடிந்து பவானி ஆற்றின் கரையில் விழுந்தது. மேலும் அதனையொட்டி வைக்கப்பட்டிருந்த 63 நாயன்மார்களின் சிலைகள் முழுவதும் சேதமடைந்தன. இதன் காரணமாக இன்று கோயிலின் நடை சாத்தப்பட்டது.
தகவலறிந்த சத்தியமங்கலம் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனர். கட்டுமான பணியினை தொடங்குவதற்கு முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி பலப்படுத்தியபின் தொடங்கியிருந்தால் கோயில் சுவர் இடிந்து விழுவதை தவிர்த்திருக்கலாம் என பக்தர்களிடையே கருத்து நிலவுகிறது.