ஈரோடு: திங்களூர் செல்லப்பம்பாளையத்தில் செல்லப்பன் என்பவரது தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த 10 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் காயமடைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் திங்களூர் செல்லப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (54). விவசாயத் தொழில் செய்து வரும் செல்லப்பன் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளைப் பட்டியில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை பட்டியைத் திறந்து பார்த்த செல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். பட்டியிலிருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.
மேலும் 4 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. இது குறித்து திங்களூர் போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு விவசாயின் ஆடுகளைக் கடித்து கொன்றது தெரியவந்தது. இதன் பின்னர் வனத்துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகளின் கால் தடம் பதிந்து உள்ளதா என ஆய்வு செய்தனர்.
மேலும் காயமடைந்த 4 ஆடுகளுக்குக் கால் நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த ஆடுகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என செல்லப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வனத்துறையினர் மேலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மர்ம விலங்கு கடித்து ஒரே இரவில் 10 ஆடுகள் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் நேற்று அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தது. சித்தோடு அருகே சில மாதங்களுக்கு முன் இதே போல மர்ம விலங்கு கடுத்து ஆடுகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மர்ம விலங்கால் ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.