ஈரோடு: அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் ஓசூர் சாலையில் ஆரம்பச் சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலைக்கிராம மக்கள் பலரும் சென்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை (டிசம்பர் 1) இரவு மலைப் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற கர்ப்பிணிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அப்பெண்ணை 108 ஆம்புலன்சில் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
அப்போது மணியாச்சி பள்ளம் அருகே திடீரென வந்த யானைகள் வழிமறித்தன. இதனால் மலைப்பாதையிலே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவசரமாக வாகனத்தை நிறுத்தினார். நீண்ட நேரமாகியும் யானைகள் கூட்டம் கலைந்துசெல்லாமல் அதே இடத்தில் இருந்ததால் ஆம்புலன்சிலேயே பெண்ணிற்குப் பிரசவம் பார்த்தனர்.
பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. யானைகள் புடைசூழ துரிதமாகச் செயல்பட்டு 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைக் கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு