ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி பார்வதி, நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். பார்வதி பிரசவத்திற்காக உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பிரசவ வலியில் துடித்த பார்வதியை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு புஞ்சை புளியம்பட்டியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் உதவியாளர் மதன்குமார், ஓட்டுநர் சௌந்தரராஜன் ஆகியோர் பணியில் இருந்தனர். ஆம்புலன்ஸ் மூலக்கிணறு அருகே சென்றபோது பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் மதன்குமார் பார்வதிக்கு பிரசவம் பார்த்தார்.
அதில் பார்வதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயையும் சேயையும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ உதவியாளர் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.