ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி, தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசியை அரிசி கடத்தல் கும்பல் குறைந்த விலைக்கு, வாங்கி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு கடத்திச்சென்று, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (டிச.28) அதிகாலை தாளவாடி அருகே மகாராஜன்புரம் வனசோதனை சாவடி பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 3.25 டன் ரேஷன் அரிசியை, தாளவாடி போலீசார் பறிமுதல் செய்து, ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக தாளவாடியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மனோஜ் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலைச் சேர்ந்த மாதேவா என்ற நபர் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ சக்திவேல் என்பவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு தாளவாடி ஆய்வாளருக்கு 14ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், லஞ்சமாக பணத்தை பெற்றுக் கொண்டு ரேஷன் அரிசி கடத்தியபோது பிடித்ததாகவும் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கிய நபர்களை முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு பேசும் வெளியான ஆடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தாளவாடி ஆய்வாளரும், ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ இருவரும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் சாதாரணமாக உரையாடும் ஆடியோ வெளியாகியுள்ளதால் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் கும்பலுக்கு போலீசார் துணையாக இருப்பதாக தாளவாடி மலைப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: வீடுகளை விற்று சுபாஷுக்கு நன்கொடை வழங்கிய தியாகி - இலவச பட்டா கேட்டு அலையும் வாரிசு