ஏதேனும் அதிசயம் நடந்து தனது வாழ்க்கை உச்சத்திற்கு சென்று விடாதா? மனநிம்மதி கிடைக்குமா? உள்ளிட்ட பல மனக்குமுறல்களை மனிதர்கள் ஆன்மிகத்தில் தான் பிணைத்து வைத்துள்ளனர். அப்படியான ஒன்று ஜோதிடமும் கூட. ஜோதிடம் உண்மையா? பொய்யா? என்பதை விட மனிதர்கள் அந்த நேரத்து நம்பிக்கை கீற்றாகவே அது இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மட்டுமில்லாது நகரங்களிலும் கிளி ஜோதிடம் மீது இன்னும் நம்பிக்கை உடையவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த கிளி ஜோதிடத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயை நம்பி ஏராளமான ஜோதிடர்கள் வாழ்ந்து வருகின்றனர். அண்மைகாலமாக கிளியை வைத்து ஜோதிடம் செய்து வருவோர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு ஜோதிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாரம்பரியமாக கிளியை வைத்து ஜோதிடம் செய்து வரும் ஜோதிடர்களுக்கு வேறு வேலை தெரியாத நிலையில் இந்த நெருக்கடி அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னவர்களின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
புலிகள் காப்பகத்தில் கிளி வைத்திருப்போர் மீது வனத்துறை அபராதம் விதித்துள்ளது. அண்மையில் ஜீரஹள்ளி வனத்தில் பச்சைகிளியை பிடிக்க முயன்றதாக மைசூரைச் சேர்ந்த வருணன் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பவானிசாகர் மற்றும் டிஎன்பாளையம் வனச்சரகத்திலும் கிளி வைத்திருப்போர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஜோதிடம் செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அருண்லால், கிளியை பிடித்து வாரச்சந்தை, மார்க்கெட்டில் வணிக ரீதியாக விற்பனை செய்து வருவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வணிகரீதியாக கிளியை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பதை கிளிஜோதிடர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் கிளிஜோதிடர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வருங்காலத்திலும் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கிளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை!