ஈரோடு: அருந்ததியினர் குறித்து அவதூறாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், இவ்விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும்; இல்லாவிட்டால், அக்கட்சியின் வேட்பாளர் என்ற முறையில் நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஈரோடு, ஆலமரத்தெருவில் கடந்த 20ஆம் தேதி உரிய அனுமதியினைப் பெறாமல், மேனகா நவநீதன் பரப்புரை மேற்கொண்டதால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேனகா மீது மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.