ஈரோட்டை சேர்ந்தவர் குழந்தையம்மாள் (69). இவர் சுதந்திர தினத்தன்று பிறந்ததன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கொடிகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்குவது வழக்கம். இதனை 43 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக இருந்த காங்கேயத்தில் பிறந்த குழந்தையம்மாள், பிழைப்புக்காக தனது சிறு வயதிலேயே ஈரோடு நகரத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். தற்போது ஈரோடு மாவட்டம் நாதக்கவுண்டன்பாளையத்தில் தனது வருவாயில் சொந்தமாக கட்டிய சிறிய வீட்டில் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இவர் சிறிய வயதில் தந்தையுடன் சேர்ந்து திருவிழாவில் தற்காலிக கடைகளை அமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகளை விற்பனை செய்து வந்ததை தந்தையின் இறப்புக்குப் பிறகு, குழந்தையம்மாள் அதனை தொடர்ந்து வருகிறார்.
மீதி நாள்களில் பலூன்கள் உள்ளிட்ட பொருள்களை விற்று தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஆறுமுகம் தள்ளுவண்டியின் மூலம் சின்ன சின்ன பொருள்களை வீதி வீதியாக சென்று விற்பனை செய்துவருகிறார்.
உடல்நிலை நன்றாக இருந்தபோது ஈரோட்டிலிருந்து கரூர் மாவட்டம் வரை சென்று தேசியக் கொடிகளை விநியோகித்து வந்துள்ளார். ரயில் நிலையம், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளிக் குழந்தைகள் என ஓடி ஓடி சென்று அனைவருக்கும் தேசியக் கொடிகளை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், தற்போது வயது மூப்பு காரணமாக இப்போது ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தபடியே பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கி வருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு இவரது கணவரும் உதவியாக இருக்கிறார்.
எவ்வித தடை ஏற்பட்டாலும் உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்து கொடிகளை வழங்கி வருவதை நிறுத்தமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் குழந்தையம்மாள்.
வறுமையைக் கடந்து அனைவருக்கும் தேசியக் கொடியை இலவசமாக கொடுக்கும் மூதாட்டியின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சூப்பர் பிங்க் நிலவில் ஜொலித்த உலக நாடுகள்!