சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் செப்.26ஆம் தேதி பவளக்குட்டை வனப்பகுதியில் இருந்து 3 மாத குட்டி பெண்யானை ஊருக்குள் புகுந்தது. இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குட்டியை மீட்டு தாய் யானை கூட்டத்தில் சேர்த்தனர். 8 நாட்களுக்கு பின் அக்.3ஆம் தேதி மீண்டும் குட்டியானை யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து ஆசனூர் என்ஜினியரிங் சாலையில் சுற்றித்திரிந்தது.
இதைபார்த்த வனத்துறையினர் குட்டியை மீட்டு சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வன கால்நடை மையத்தில் சேர்த்தனர். அங்கு மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தினந்தோறும் லேக்டோஜின், பால் ஆகியவற்றை கொடுத்து பராமரித்துவந்தனர். மேலும் அதற்கு அம்மு குட்டி என பெயரிட்டு பாசத்துடன் வளர்த்தனர்.
இந்நிலையில் குட்டியானையை மீண்டும் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அக்.9ஆம் தேதி காலை தனி வாகனத்தில் குட்டியை ஏற்றிக்கொண்டு பண்ணாரி பேலாரி கோவில் பகுதியில் விட்டனர். தாயிடம் சேர்க்கும் முயற்சியில், ஒரு யானைக் கூட்டம் கூட அதனை சேர்த்துக்கொள்ளவில்லை.
இறுதியாக ஒரு யானைக்கூட்டம் சேர்த்துக்கொண்ட நிலையில், மீண்டும் வனத்துறையினர் காத்திருந்த இடத்துக்கே குட்டியானை வந்தது. 15 நாட்களாக நடந்த பாசப் போராட்டம் தோல்வியில் முடிந்ததையடுத்து குட்டியானையை முதுமலை காப்பகத்தில் உள்ள மற்றொரு குட்டியுடன் சேர்ப்பதற்கு தமிழக அரசு அனுமதியளித்து.
அதன்படி கால்நடை மருத்துவர் குட்டியை பரிசோதனை செய்து நல்லநிலையில் இருப்பதாக சான்றளித்தார். இன்று தனி வாகனத்தில் குட்டி யானையை ஏற்றிக்கொண்டு சாம்ராஜ் நகர், குண்டல்பேட் வழியாக முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கால்பந்து விளையாடும் ஜம்போக்கள்!