தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், தலைமையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களது சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்து அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தனர்.
ஈரோட்டில் ஆண் வாக்காளர்கள் 4,47,588; பெண் வாக்காளர்கள் 4,60,532; மற்றவர்கள் 40 உள்பட மொத்த 9,08,160 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 2 ஆயிரத்து 779 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் நேர்முகத் தேர்தல் மூலம் 2 ஆயிரத்து 524 உறுப்பினர்களும், மறைமுகத் தேர்தல் மூலம் 255 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
- மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- 19, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - 183, சிற்றூராட்சித் தலைவர் - 255 மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்- 2097 என மொத்தம் 2524 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- மாவட்ட ஊராட்சித் தலைவர்-1, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்-1, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்- 14, ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத் தலைவர் -14, சிற்றூராட்சி துணைத் தலைவர்கள் என மொத்தம் 255 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இங்கு 1576 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரிசி அட்டைகளுக்கு மாறிய பயனாளிகளுக்கு அரிசி வழங்க ரூ. 604 கோடி ஒதுக்கீடு