ஈரோடு: தமிழ்நாட்டில் காய்கறி விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம் ஆகியோரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ''தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விலைவாசி உயர்வு, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
இதையும் படிங்க: ஈரோடு நேதாஜி தக்காளி வரத்து அதிகரிப்பு; கிலோ ரூ.70-க்கு விற்பனை!
தக்காளி, வெங்காயம் உள்ளிட்டப் பல பொருட்களின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. மின்சார கட்டண உயர்வால் மக்கள் பெருந்துயரில் உள்ளனர்.
மின்சாரக் கட்டணத்தினால் நெசவாளர்கள், தொழில் நடத்துபவர்கள் சிரமத்தில் உள்ளார்கள். இதனைக் கருத்தில் கொண்டு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். கொப்பரை தேங்காய் வாங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவும் பாஜகவும் இணைந்து பணியாற்றும்'' என்றார். செந்தில் பாலாஜி கைது, அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, ஜெயக்குமார் இதற்கு தெளிவாக பதில் கூறிவிட்டார் என்றார்.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு, ''பெங்களூருவில் நடைபெற்ற கூட்டம் வேறு, டெல்லியில் நடைபெற்ற கூட்டம் வேறு. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் அருகில் ஈபிஎஸ் இருந்தார். பெங்களூருவில் நடந்த கூட்டம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும்' - கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை!