ஈரோடு: பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் (ஏப்.07) காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதன் காரணமாக, சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த 24 கர்நாடக அரசுப் பேருந்துகள் வராததால் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக அரசு பேருந்துகள் இல்லாத காரணத்தால் மைசூர், பெங்களூரு, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்து கூடுதலாக 10 அரசு பேருந்துகள் மைசூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் வழக்கமான 16 பேருந்துகளுடன், தற்போது கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் சிரமம் இன்றி சென்று வருகின்றனர். கர்நாடக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என சத்தியமங்கலம் போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.