ஈரோடு: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் புதுமுக இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பார்க்கிங் திரைப்படம் (Parking Movie) கடந்த 1ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையடுத்து ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குநர் ராம் உள்ளிட்ட படக் குழுவினர், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேரடியாகச் சென்று படம் குறித்த கருத்தை ரசிகர்களிடம் கேட்டறிந்தும், ரசிகர்களுடன் இணைந்து பார்க்கிங் திரைப்படத்தைப் பார்த்தும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று (டிச.09) ஈரோட்டில் உள்ள அண்ணா திரையரங்கில் பார்க்கிங் திரைப்படத்தை, நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குநர் ராம் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் படம் குறித்த கருத்துக்களையும் நேரடியாக ரசிகர்களிடமே கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறுகையில், “பார்க்கிங் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உதவியாக இருந்த தமிழ் மக்கள் மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு நன்றி.
ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு உள்ளது. வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நடிகர்கள் இயன்ற வரை உதவி செய்து வருகிறார்கள். சில வளர்ந்து வரும் நடிகர்கள் செய்யும் உதவிகள் வெளியே தெரிவதில்லை. ஆனால், சிலர் செய்யும் உதவிகள் வெளியே தெரிகிறது. திரைப்படத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான காட்சி, காட்சிக்குத் தேவை என்ற அடிப்படையில் மட்டுமே வைக்கப்படுகிறது.
அதைத் தாண்டி மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லுகிறோம். வேண்டியதை எடுத்துக்கொண்டு, தேவையில்லாததை விட்டுவிடலாம். திரைப்படத்தில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இவர்கள் தான் வரவேண்டும், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் அரசியலில் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், நல்ல ஆட்சி கொடுத்தால் நல்லது தான். முதலமைச்சரின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்காக எனது சார்பில் ரூபாய் ஒரு லட்சம், பார்க்கிங் திரைப்பட குழு சார்பாக ரூபாய் 2 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மென்மையான குரல் மூலம் ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் இசை அரசன் ஜி.வி.பிரகாஷ் குமார்!