ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியைச் சேர்ந்தவர், கனகாம்பாள் (80 வயது). தனது மகள் சாந்தி(60), அவரது கணவர் மோகனசுந்தரம், பேரன் சரவணக்குமார்(34) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று(பிப்.12) குமணன் வீதி பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சாந்தியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் வீசியதால் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டினுள் சாந்தியின் தாயார் கனகாம்பாள் மற்றும் அவரது கணவர் மோகனசுந்தரம் ஆகிய இரண்டு பேரின் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. கோபிசெட்டிபாளையம் போலீசார், இறந்து கிடந்த 2 பேரின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாததால் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாக சாந்தி என்பவர் தெரிவித்துள்ளார். மேலும், கணவர் இறந்து 7 நாட்கள் ஆனதாகவும், தாயார் இறந்து 2 நாள்கள் ஆனதாகவும் சாந்தி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். வறுமையின் காரணமாக உணவின்றி உயிரிழந்திருக்கலாம் எனவும்; சாந்தி குடும்பத்தினர் எவரிடமும் பேசாமல் வீட்டிலேயே முடங்கியதே இதற்கு காரணம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்.. இவர்கள் தான் - ஐஜி கண்ணன் பேட்டி