ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகள், ஜூன் 21ஆம் தேதி மாயமானார்.
சிறுமியை மீட்ட காவல் துறை
இதையடுத்து அவரது பெற்றோரும் உறவினர்களும் சிறுமியை பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் அந்தியூர் அருகேவுள்ள பூனாச்சி பகுதியில் சிறுமி இருந்தது தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.
போக்சோவில் கைது
இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், கணபதி நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சூசைராஜ் (36) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சூசைராஜை கைது செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை ஏமாற்றித் திருமணம், பாலியல் வன்புணர்வு: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ