ஈரோடு: சத்தியமங்கலம் எம்.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் சுகாதாரத்துறையில் பயோ மெடிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமசாமி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் நாமக்கல் ஏழூர் அகரம் பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலான பொம்மையன் சாமி கோயிலுக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் இன்று (பிப்.21) அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனதை கண்ட ராமசாமி உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஈரோட்டிலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சுற்றுவட்டார பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் நடமாட்டம் ஏதும் பதிவாகியுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தினால் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Erode by-election: இளங்கோவனுக்கு ஆதரவாக மேயர் பிரியா தீவிர பிரசாரம்!