சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுடன் ஈஷா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதிகாலை தங்களது காரில் சேலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவேயிருந்த தடுப்பின் மீது மோதியது. இதனால், கார் அடுத்த சாலைக்குச் சென்று சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சேலத்தைச் சேர்ந்த கெளரி என்பவர் காரின் டயரில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த சித்தோடு காவல் துறையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்தில் படுகாயமடைந்த ஜோதி என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டு ஆண் ஓட்டுநர்கள், பெண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா விவகாரத்தில் கொலை: ஒருவர் கைது