கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே கிடைக்கின்றது. இதனிடையே வீடுகளின்றி சாலையோரம் வாழும் மக்கள் உணவின்றி பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் இளைஞர்கள் ஊர் திரும்ப முடியாமல் இருப்பவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர். பஸ் நிலையம், பூ மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 நபர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
மேலும் ரயில் நிலையம் அருகில் வசித்துவரும் 50க்கும் மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து உணவளித்து வருகின்றனர். இவர்களின் இந்த சேவையால் ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் பசியின்றி உள்ளனர்.
இது குறித்து இளைஞர்கள் கூறுகையில்,
சரியான மன நிலையிலுள்ள நாமே இந்த ஊரடங்கு உத்தரவினால் வெளியிடங்களில் உணவு கிடைக்காமல் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். ஆனால் தங்களுக்கு எது தேவை என்பதை சொல்ல முடியாத இந்த மக்களுக்கு எப்படி உணவு கிடைக்கும் என்று யோசித்தோம். சிலரிடம் பணம் இருந்தாலும் கூட உணவு வாங்குவதற்கான வழி குறைவாக உள்ளதை அறிந்தோம். எனவே இவர்களின் பசியை போக்குவதற்காக இளைஞர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து இவர்களுக்கான உணவை தயாரித்து வருகிறோம்.
ஒவ்வொரு நாளும் உணவு அதிகமாக தேவைப்படுகிறது. இவர்களுக்கான உணவை தயாரித்து வழங்குவதால் அதை உண்டு அவர்கள் பசியாறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் நீடிக்கப்படும் நிதியாண்டு? - நிதியமைச்சகம் விளக்கம்