திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 35 கி.மீ தொலைவில் போளூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் பலத்த காற்று வீசி வந்தது. பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் கம்பங்கள் அறுந்தும் சேதமடைந்தது.
இதனை தொடர்ந்து சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மேல்மலை கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் தோட்ட வேலைக்காக சென்றுள்ளார். அப்போது பலத்த காற்றின் காரணமாக எதிர்பாராத விதமாக அவரது தோட்டத்தில் அறுந்து விழுந்த உயர்மின் அழுத்த கம்பியை அவர் தொட்டதால் அவரின் மேல் மின்சாரம் பாய்ந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் இவரை காப்பற்ற முயன்ற முத்து பாண்டி என்பவருக்கும் மின்சாரம் பாய்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.