திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 25) மாலை திடீரென இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்நிலையில், அடியனூத்து அருகேயுள்ள கொலாரம்பட்டி கிராமத்தில் புளியமரத்து அடியில் இருந்த சின்டெக்ஸ் தொட்டியில் பெண்கள் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களை எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில், பாண்டி என்பவரது மனைவி லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் அருகில் நின்றிருந்த ராமலட்சுமி, அமுதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்தடியில் நின்றிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விழுப்புரத்தில், மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு