திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் காணவாய்பட்டி ஊராட்சியில் கோட்டைகாரன்பட்டி, சக்கிலியன்கொடை, மாமரத்துபட்டி, ஒத்தநாவல்பட்டி, ஒத்தகடை உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் தற்சமயம் நிலவிவரும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கடும் அவதி அடைந்த பொதுமக்கள் சாணார்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சாணார்பட்டி காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துரித நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.