திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கள்ளிப்பட்டி ஊரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னமநாயக்கம்பட்டியில் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்தும் சென்னமநாயக்கம்பட்டி வாக்குச்சாவடி அமைத்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க உள்ளதாகவும் இல்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்க உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க...நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக்கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி