திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைபட்டியலில் களி மண் சிற்பங்கள் செய்யும் கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கார்த்திகை சுட்டி, துளசி மாடம், அடுக்கு பானை, வீட்டு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக இங்கு கிழங்கு மாவினால் அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் இந்த சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டு, ரசாயன கலவை இல்லாத வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயாராகி வருவதாக சிற்பக் கலைஞர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை தயாரிக்கும் பணியில் சிறப்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுடன் விநாயகர் இருப்பது போன்ற வடிவமைப்பில் சிலைகள் செய்து அதற்கு வண்ண வண்ண வர்ணங்கள் தீட்டும் பணிகளை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த சிலைகள் ரூ.100 முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் விநாயகர் சிலையை முன்பதிவு செய்து வாங்கி செல்கின்றனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகப்படியான ஆர்டர் வந்துள்ளதால் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ளதால் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறும். ஆனால் தற்போது விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தயார் செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: "அரைகுறை பணிக்கு ரூபாய் ஒரு கோடியா?" - தென்காசி ஆய்வில் உறுதிமொழி குழு பகீர் கேள்வி!