தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு சுற்றுப்பயணமும் மேற்கொண்டனர்.
இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்த நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், ஓய்வுக்காக ஸ்டாலின் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை கொடைக்கானலுக்கு வருகைபுரிந்தார். அங்கு தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கி ஓய்வெடுத்துவருகிறார்.
தொடர்ந்து தனியார் விடுதி வளாகத்தில் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காணொலி இணையதளத்தில் வெகுவாகப் பரவிவருகிறது. தொடர்ந்து கேரம் போர்டு விளையாடும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளது.