வாகனங்களில் சுற்றும் மக்கள் - தடுப்புப் பணியில் காவல்துறை - dindigul police
திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கின்ற காரணத்தினால் முக்கிய பகுதிகளில் மக்கள் சாதாரணமாக வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.
இந்தியாவில் கரோனா தொற்றின் காரணமாக நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள், கடைகள் இயங்கிட சில தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
இதன் காரணமாக மக்கள் கடை வீதிகளில் கூடுவது அதிகரித்தது. குறிப்பாக திண்டுக்கல்லில் கடைகள் அதிகமுள்ள மெயின்ரோடு, பெரியகடைவீதி, மேற்கு வீதி, அரசமரத்தெரு, பழனி ரோடு ஆகிய பகுதிகளில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் அதிகம் சென்றனர். பல இடங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வழக்கம்போல் தங்களது பணிகளை பார்த்து வருகின்றனர்.
இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கடைவீதிக்குள் வாகனங்களில் செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை, தீயணைப்பு நிலையம், மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களில் செல்லாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.