திண்டுக்கல்: விடுமுறை கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலாப் பயணியை காவலர் ஒருவர் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளதால், அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதிக்குச் செல்லக்கூடிய முகப்பு பகுதியில், காவல் துறையின் சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. இங்கிருந்துதான் பிரதானச் சுற்றுலாத்தலமான ‘டால்பின் நோஸ்’ உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லமுடியும்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவான வரலாறு
வட்டக்கானல் பகுதிக்குச் செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். அதேபோன்று சுற்றுலா வாகனத்தை பரிசோதனை செய்துகொண்டிருந்த காவலர் ஒருவர், ஒரு வாகனத்தில் வந்த சுற்றுலாப் பயணியை தாக்குவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
இது குறித்து கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட வாகனத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சோதனை செய்த காவலர்களிடம் தவறாக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த காவலர் தாக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து கூடுதல் விசாரணை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.