திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவமழை அவ்வப்போது பெய்த போதிலும் போதிய தண்ணீரின்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வராமல் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். எனவே அப்பகுதி மக்கள் தங்களுக்கு உடனடியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், ”100 குடும்பங்களுக்கு மேலானோர் மலை ஓரங்களில் வசித்துவருகிறோம். எங்களுக்கு போதிய வருமானம், நிரந்தர வேலையின்றி வறுமையில் வாடுகிறோம். இதில் எப்படி நாங்கள் காசு கொடுத்து நீர் வாங்க முடியும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் எங்கள் பகுதிக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டும்” என்றார்.