திண்டுக்கல் மாவட்டம், சிலுவத்தூர் அருகேயுள்ள ஆர்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (37). இவர் கூலித்தொழிலாளி. தங்கவேல் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்ததைத் தெரிந்துகொண்டு அவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (65), குருநாதன் (70) ஆகியோரும் மாணவியை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், மூன்று பேரும் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியும் உயிருக்கு பயந்து, யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதைப் பார்த்து மாணவியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் பெற்றோர் மாணவியிடம் விசாரிக்கையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தென்றல் வழக்குப்பதிவு செய்து தங்கவேல், பெருமாள், குருநாதன் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண் உயிரிழப்புக்குக் காரணம் மாந்திரீக முட்டையா? அச்சத்தில் மக்கள்!