திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் வருகிற ஜனவரி 12ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதனால் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதயாத்திரை வரும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் 'தோழி' எனும் இருசக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர வாகனத்தை இயக்க பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை வரும் பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, குற்றங்கள் நிகழாத வகையில் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
மேலும் கூட்டநெரிசலில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
குறிப்பாக கூட்டத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் ஆகிய குற்றச்செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.
பழனிக்கு பாதயாத்திரை வரும் பெண்கள், ‘181’ என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவித்தால் உடனடியாக குற்றம் நடக்கும் இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் காவலர்கள் விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபடுவர்.
தோழி இருசக்கர வாகன சேவையை பழனி டிஎஸ்பி சத்தியராஜ் தொடங்கி வைத்து பெண் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், ஆய்வாளர் செல்வகுமாரி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராமாயணத்துடன் நேரடித்தொடர்பு கொண்ட அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி உற்சவம்