காமராசர் ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டம் என்று கொண்டுவந்தார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இந்த அங்கன்வாடி மையங்கள் ஏழைக் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளவும், சத்தான உணவு வழங்கவும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்குப் பின்புறம் கவடகார தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவை எலிகள் தின்றுள்ளன. அதேபோல், அங்கன்வாடி மையத்தில் உள்ள மாவு மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல்வேறு காய்ச்சல்கள் பொதுமக்களை அச்சுறுத்திவரும் நிலையில் எலிகள் சாப்பிடுவதற்காக மாவு உள்ளதா அல்லது மனிதர்கள் சாப்பிடுவதற்கு மாவு உள்ளதா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டபோது, "15 நாள்களுக்கு ஒரு முறைதான் ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. தற்போது தொற்று காலம் என்பதால் நாங்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறைதான் வருகிறோம்" என்று அலட்சியமான பதிலைக் கூறினார்.
அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் ஆகியவற்றில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு தன்னார்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!