திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார்.
இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் மலர்கனிராஜா தனது மனைவியுடன் இன்று இடும்பன்மலை வாசல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தர்மராஜ் இருவரையும் கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மலர்கனிராஜாவின் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த மலர்கனிராஜா, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் மலர்கனிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல்துறையினர், தப்பியோடிய தர்மராஜை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 760 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் குடை வழங்கல் - ஆச்சர்யப்படுத்திய தலைமை ஆசிரியர்!