திண்டுக்கல்: பழனியில் உள்ள முஸ்லிம்களின் அடக்கஸ்தலம், வாணிபக்காடு மற்றும் பாலசமுத்திரத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடங்களை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் நேற்று (ஜூன் 6) நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் ரகுமான், “தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.
மேலும், பல்வேறு சொத்துக்களை சட்டப்பூர்வ அடிப்படையில் மீட்கும் பணி நடந்து வருகிறது. பாலசமுத்திரத்தில் பிரச்னைக்கு உரிய இடம் என கூறப்படும் நிலம், அரசு சர்வேயர்களால் அளவிடப்பட்ட பகுதி ஆகும். இந்த இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
எனவே, நான் இங்கு உள்ள பிரச்னை குறித்து அறிய நேரடியாக இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். ஆனால், பிரச்னை இடம் அல்ல. கபர்ஸ்தானுக்கு கொண்டு வரப்படும் பிரேதங்கள் பொதுப் பாதை வழியாக வரும்போது, அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பதால் பிரச்னை உள்ளது.
எனவேதான் காவல் துறையால் ஒவ்வொரு முறையும் பாதுகாப்போடு பிரேதம் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுவிக்க கோருவது என்பது ஒரு சமுதாயப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை தந்துள்ளது. மேலும், ஆளுநரின் ஒப்பதலோடு அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம். தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை என்பது முஸ்லிம் சமூக இளைஞர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு சில அதிகாரிகளால் நடத்தப்படுவது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்பதையும், இந்த சோதனை அவசியமானது என்பதையும் என்ஐஏ அமைப்பும், மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என கூறினார். முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்து சிதறிய வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்தன.
குறிப்பாக, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனையடுத்து இந்த தடை செய்யப்பட்ட அமைப்பு உடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான வீடு உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது. இதில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2022இல் திரும்பிப் பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி!