திண்டுக்கல் ஜி.டி.என் கலைக் கல்லூரியில் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 தேதி வரை தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 26ஆவது வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டினை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலக வரலாற்றில் உயிர்ப்புடன் இருக்கும் இரண்டு கலாசாரங்கள், இந்திய மற்றும் சீன கலாசாரம்தான். ஒரு கலாசாரம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல; அது வாழ்வியல் அத்தியாயம். வரலாற்றை நாம் எழுதுவதற்கு முன்னர் சரியான புரிதலும் முறையான பகுப்பாய்வும் தேவைப்படுகிறது.
![Alagappa University Vice chancellor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20191011-190618jpg_11102019194158_1110f_02497_33.jpg)
ஏனெனில் வரலாறு என்பது சமூக அறிவியலின் முக்கிய அங்கமாகும். தமிழ் கலாச்சாரம் மிகவும் தொன்மையானது என்பதை பறைசாற்றும் விதமாக கீழடி உள்ளது. கீழடியில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தமிழ் சமூகம் படித்த, முன்னேறிய, நாகரிக செழுமைகொண்ட சமூகம் என்பது ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது" எனக் கூறினார்.
இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆறு அமர்வுகளில் 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
இதையும் படிங்க: தமிழ் நடிகையை மணக்கும் கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே