தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகபெருமானுக்கு தனிச் சிறப்பாக மிகுந்த நாளான தைப்பூச பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மை பெற்றதாக கருதப்படுகிறது. இதையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் விரதம் இருந்து அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம் கோயில்கள் முழுவதும் எதிரொலித்து வருகின்றன.
காவடிகள் எடுத்தும், பாதையாத்திரை சென்றும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி முருகபெருமானை தரிசித்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று(பிப்.4) மாலை நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் தேரில் முத்துக்குமாரசாமி எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் ரத வீதிகளில் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்கள் வெள்ளத்தால் பழனி கோயில் விழாக் கோலம் பூண்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா ஆடம்பரமாக நடைபெற்று வருகிறது. சுப்பிரமணிய சுவாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகபெருமானை சந்திக்க ஆயிரக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளான சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் முருகன் கோயில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை முன்னேற்றம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!