திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (30), திருமணமானவர். இவர் சேலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது செல்போனிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த எண்ணுக்கு மாணவி தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்மூலம் இருவரும் நட்பாகப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நட்பைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பழனிச்சாமி மாணவியிடம் சந்திக்க வரும்படி அழைத்து அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பழனிச்சாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (அக். 07) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பழனிச்சாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பதிநான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஏழாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து பழனிச்சாமி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விவசாயியிடம் கையூட்டு வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது!